சுசீந்திரத்தில் கூட்டுறவு வாரவிழா: 7,565 பேருக்கு ரூ.31½ கோடி கடன் உதவி - தளவாய் சுந்தரம் வழங்கினார்
சுசீந்திரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 7,565 பேருக்கு ரூ.31½ கோடி கடன் உதவியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.
சுசீந்திரம்,
குமரி மாவட்டத்தில் 66-வது கூட்டுறவு வார விழா சுசீந்திரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் குத்துவிளக்கு ஏற்றினார். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட மேலாளர் ரவிச்சந்திரன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி திட்ட விளக்க உரையாற்றினார். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் சிறப்புரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியதோடு 7 ஆயிரத்து 565 பயனாளிகளுக்கு ரூ.31 கோடியே 67 லட்சம் கடனுதவி வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது சில இடங்களில் ரேஷன் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களுக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்ததால் 3 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதன் பிறகு முன்னாள் முதல்-அமைச்சரான ஜெயலலிதா நிதிகளை ஒதுக்கி கடன்களை நேராகவும், சீராகவும் மாற்றி அமைத்தார்.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அதன் மூலம் காப்பீடு பெற்று தந்தது ஒரு மாநிலம் உண்டென்றால், அது தமிழகம் மட்டுமே.
இந்த ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக 680 பயனாளிகளுக்கு ரூ.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எது சொன்னாலும், அவர்களது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி கொடுப்பதில் தமிழக அரசு திறன்பட செயல்படுகிறது.
திட்டங்கள் தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் முன்னாள் முதல்-அமைச்சரான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகராக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன், ஜாண் தங்கம் மற்றும் சேவியர் மனோகரன், ராஜன், கட்சி பிரமுகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், கூட்டுறவு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story