சத்தீஷ்காரில் நடந்த, 76 துணை ராணுவத்தினர் படுகொலையில் மாவோயிஸ்டு தீபக்கிற்கு தொடர்பு - போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்


சத்தீஷ்காரில் நடந்த, 76 துணை ராணுவத்தினர் படுகொலையில் மாவோயிஸ்டு தீபக்கிற்கு தொடர்பு - போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 5:08 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் 76 துணை ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர் மாவோயிஸ்டு தீபக் என்ற பகீர் தகவலை போலீசார் வெளியிட்டனர்.

கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி கேரள தண்டர் போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் மாவோயிஸ்டு மணிவாசகம் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய தீபக் உள்பட 3 பேர் குண்டுகாயங்களுடன் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தமிழக -கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 9-ந் தேதி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு தீபக்கை (வயது 32) அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை தடாகம் போலீசில் அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.

தடாகம் போலீசார் அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாவோயிஸ்டு தீபக்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தீபக் மீது சத்தீஷ்கார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சத்தீஷ்கார் மாநில போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சத்தீஷ்கார் மாநிலம் தாண்டேவாடா மாவட்டம் சிண்டல்நர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் திடீரென்று ஒன்று திரண்டு துணை ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 76 துணை ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் துணை ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஏராளமான மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீபக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலும் தீபக்கிற்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மாவோயிஸ்டு தீபக் மீது சுக்மா மாவட்டத்தில் ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரை அந்த மாவட்ட கோர்ட்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.

இந்தநிலையில் தீபக் கோவை அருகே கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சத்தீஷ்கார் மாநில போலீஸ் துணை சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் சஞ்சய் சிங், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர் மற்றும் போலீசார் கோவை வந்தனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்டு தீபக்கை பார்த்தனர். தமிழக போலீசார் கைது செய்தது மாவோயிஸ்டு தீபக்தான் என்பதை உறுதி செய்து கொண்டனர்.

அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல்வேறு பகீர் தகவல்கள் வெளிவரும். மாவோயிஸ்டு தீபக், கொரில்லா படையில் உறுப்பினராகவும், ஆயுத பயிற்சியாளராக வும் செயல்பட்டு வந்துள்ளார். எனவே அவரிடம் நாங்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து சத்தீஷ்கார் மாநில போலீசாரும் மாவோயிஸ்டு தீபக்கை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு இந்தியில் இருந்ததால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்யுமாறு கோர்ட்டில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சத்தீஷ்கார் மாநில போலீசார் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில போலீசாரும் மாவோயிஸ்டு தீபக்கிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களும் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தீபக் இந்தியாவில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவராக செயல்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story