இத்தலார் பஜாரில் செயல்படும் மதுக்கடையை மூடக்கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


இத்தலார் பஜாரில் செயல்படும் மதுக்கடையை மூடக்கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:45 PM GMT (Updated: 18 Nov 2019 5:22 PM GMT)

இத்தலார் பஜாரில் செயல்படும் மதுக்கடையை மூடக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர். அதன்படி ஊட்டி அருகே இத்தலார், பெம்பட்டி, பேலிதளா, போர்த்தி, கோத்தகண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இத்தலார் பஜாரில் செயல்பட்டு வரும் மதுக்கடையை மூடக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினர். அங்கு பொதுமக்கள் அதிகமாக வந்ததால் தடுப்புகள் வைத்து, கயிறு கட்டப்பட்டு இருந்தது. பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இத்தலார் பஜாரை சுற்றி வினோபாஜி நகர், இந்திரா நகர், போர்த்தி ஆடா உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இத்தலாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இத்தலார் பஜாரில் அரசின் மதுக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, அஞ்சல் அலுவலகம், நூலகம், அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனை, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளது. எமரால்டுக்கு செல்லும் சாலை என்பதால், வாகன போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து இத்தலார் பஜாருக்கு மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

மதுக்கடையால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெடுஞ்சாலையோரத்தில் கடை அமைந்து உள்ளதாலும், குடியிருப்புகளையொட்டி இருப்பதாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், முதியோர்கள், கூலி தொழிலாளிகள் நடந்து செல்ல முடியவில்லை. மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சாலையோரத்தில் அமர்ந்து அருந்தி விட்டு, மதுபாட்டில்களை அப்படியே போட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. முக்கிய சாலை என்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லையென்றால் ஊர் மக்களால் தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. பின்னர் ஊர் தலைவர்களிடம் மதுக்கடையை அகற்றுவது சம்பந்தமாக வருகிற 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி முத்தோரை கிளை சார்பில் நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்தோரை ஜீவா நகரில் சாலை அமைக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவசர நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் முத்தோரையில் நடைபாதை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதனால் கழிவுநீர் நடைபாதையில் வழிந்தோடுகிறது. எனவே அதனை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்பகுதியில் சிலர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஊட்டி அருகே பெம்பட்டி கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஊட்டியில் இருந்து பெம்பட்டிக்கு காலை 7.45 மணி, 9.45 மணி, மதியம் 2.30 மணி, மாலை 4.15 மணி, இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய அரசு பஸ் குறித்த நேரத்தில் தினமும் வருவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் இதர வேலைகளுக்கு செல்பவர்கள் காலதாமதமாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆகவே ஊட்டியில் இருந்து குறித்த நேரத்தில் தினந்தோறும் பஸ் புறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி சுற்றுவட்டார இளைஞர்கள் அளித்த மனுவில், ஊட்டி மற்றும் குந்தா தாலுகாவை சேர்ந்த நாங்கள் பள்ளி, கல்லூரி படிப்பினை முடித்து விட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்து வருகிறோம். சொந்தமாக வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்ய இடங்களை தேடினோம். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டது தெரியவருகிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உள்வாடகைக்கு விடப்பட்ட கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்து முறையாக டெண்டர் அறிவிப்பு மூலம் கடைகளை வேலையில்லாத சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story