மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் அரசு பஸ் மீது கல்வீச்சு: 4 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிளில் சென்றபோது போதையில் அட்டூழியம்


மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் அரசு பஸ் மீது கல்வீச்சு: 4 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிளில் சென்றபோது போதையில் அட்டூழியம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 5:57 PM GMT)

மாமல்லபுரம் கடற்கரைச்சாலையில் மோட்டார் சைக்கிளை முந்திச்சென்றதால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கி போதையில் அட்டூழியம் செய்த வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாமல்லபுரம்,

சென்னையில் இருந்து கடலூருக்கு மாமல்லபுரம் கடற்கரைச்சாலை வழியாக விரைவுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த 4 வாலிபர்களும் மது அருந்தி உச்சக்கட்ட போதையில் இருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களும் பஸ்சை முந்தியும், பஸ்சினை உராசியபடியும் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்த பஸ் மாமல்லபுரம் பைபாஸ் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றபோது, பஸ்சின் முன்பக்கம் சென்று பஸ்சினை வழிமறித்த போதை வாலிபர்கள் 4 பேரும் தங்கள் மோட்டார் சைக்கிளை முந்திக் கொண்டு எப்படி பஸ் ஓட்டலாம்? என பஸ் டிரைவரிடம்் தகராறு செய்து அவரை தாக்க முயன்றனர்.

அதன் பின்னர், 4 பேரும் சேர்ந்து பஸ் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

பிறகு இதுபற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்ற ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சேர்ந்த அருண்(வயது24), ஈஞ்சம்பாக்கம் காலனி, அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராகுல் (24), பெத்தேல் நகரை சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி (23), கவுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 4 போதை வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் மீது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story