ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தழுதாழை கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வழங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா தழுதாழை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தழுதாழை ஏரியை காணவில்லை. அதனை மீட்க வேண்டும், நீர் நிலை பகுதிகளில் இலவச பட்டா வழங்கக்கூடாது. மேலும் அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அவர்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், தழுதாழை கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு ஏரி உள்ளது. ஆனால் அந்த ஏரியில் மூன்று புறமும் கரைகள் இல்லாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது அந்த ஏரி 100 ஏக்கருக்கு குறைவாக உள்ளது. மேலும் தழுதாழை கிராம வரைபடத்தில், ஏரியின் வரைபடம் இடம் பெறவில்லை. ஏரியில் தண்ணீர் பெருகும் இடத்தில் மரசிற்ப தொழிலாளர் சேவை மையம் உள்ளது.
தற்போது ஏரியில் மரசிற்ப தொழிலாளர்களுக்கு இலவச குடியிருப்பு பட்டா வழங்கப்பட உள்ளது. ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நாங்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே கலெக்டர் ஏரியை ஆய்வு செய்து, அதனை அளந்து ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மூன்று புறமும் கரைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 253 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கூட்டத்தில், சர்வதேச பேரிடர் மேலாண்மை குறைப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறைப்பு தின விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 29 மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் சாந்தா பரிசு வழங்கி பாராட்டினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story