இளம்பட்டியில் சேதமடைந்த காலனி வீடுகளை, இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மனு


இளம்பட்டியில் சேதமடைந்த காலனி வீடுகளை, இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 6:52 PM GMT)

இளம்பட்டியில் சேதமடைந்த காலனி வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 543 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் சிறுசேமிப்புத்துறையின் சார்பில், உலக சிக்கன நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, நாடக போட்டி, நடன போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் உமா மகேஸ்வரி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நிலமெடுப்பு) ஜானகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பவானி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருமயம் தாலுகா குலமங்கலம் இளம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் அனைவரும் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஏழை மக்கள் ஆவோம். எங்களுக்கு என்று நிரந்தர தொழிலும், நிரந்தர வருமானமும் கிடையாது. இதனால் நாங்கள் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசால் 1989-ம் ஆண்டு காலனி வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது.

மேற்படி வீடுகள் தற்போது இடிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இருப்பினும் நாங்கள் தங்குவதற்கு வேறு வீடு இல்லாததால், வேறுவழியின்றி அதே வீட்டில் வசித்து வருகிறோம். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் எங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கந்தர்வகோட்டை தாலுகா காட்டுநாவல் பெரியார்நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், பெரியார்நகரில் கடந்த மே மாதம் 7-ந் தேதி இரவு, 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்த குடிநீர் தொட்டி இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்கள் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எங்கள் பகுதியில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் மழைக்காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சிலர் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என கூறி யிருந்தனர்.

கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா மகளிரணி சார்பில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை-மலையடிப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ் ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, நமணசமுத்திரம், நச்சாந்துப்பட்டி, மலையக்கோவில் விலக்கு, மலையக்கோவில், மாங்குறிச்சிபட்டி, புதுக்குறிச்சிவயல் குடியிருப்பு வழியாக ராராபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து குலமங்கலம் வழியாக பனையப்பட்டி, குழிபிறை, செவலூர் வழியாக மலையடிப்பட்டி செல்லும்.

பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும். தற்போது இந்த டவுன் பஸ் மலையக்கோவில், மாங்குறிச்சிப்பட்டி, புதுக்குறிச்சிவயல் வழியாக செல்வதில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அரசு பஸ் மலையக்கோவில், மாங்குறிச்சிப்பட்டி, புதுக்குறிச்சிவயல் வழியாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

Next Story