திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வார விழா: 623 பேருக்கு ரூ.10 கோடி கடனுதவி அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்


திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வார விழா: 623 பேருக்கு ரூ.10 கோடி கடனுதவி அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:00 PM GMT (Updated: 18 Nov 2019 7:56 PM GMT)

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வார விழாவில் 623 பேருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பல்லடம் தொகுதி கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டுறவு கொடியை கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஏற்றிவைத்தார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் பதிவாளர் கட்டுப்பாட்டில் 234 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் இல்லாத நிலையை அடைய வேண்டும் என்று திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பணியை கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் இல்லாத நிலையை எட்ட கூட்டுறவு சங்கத்தினர் கடனுதவி வழங்கி உதவ வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

விழாவில் 234 பேருக்கு பயிர்க்கடன், 234 பேருக்கு மத்திய காலக்கடன், 34 பேருக்கு சிறு வணிக கடன், 24 பேருக்கு மகளிர் சிறு வணிக கடன் உள்பட மொத்தம் 623 பேருக்கு ரூ.10 கோடியே 1 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் கடனுதவியை அமைச்சர் வழங்கினார்.

மேலும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த பொது வினியோக திட்ட விற்பனையாளர்கள் உள்பட 31 பேருக்கு பாராட்டு கேடயம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 60 மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக ஆவின் நிறுவனம், கதர் கிராம தொழில்கள், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), தனியரசு(காங்கேயம்), கூட்டுறவு சங்கங்களின் திருப்பூர் மண்டல இணை பதிவாளர் பிரபு உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story