கொட்டாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி, 50 கிராமங்களில் கடையடைப்பு- பஸ் மறியல்


கொட்டாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி, 50 கிராமங்களில் கடையடைப்பு- பஸ் மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-19T01:30:33+05:30)

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி 50 கிராமங்களில் கடையடைப்பில் ஈடுபட்டு கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டாம்பட்டி,

மேலூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், மேலூர் தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டும். கருங்காலக்குடியை மையமாக கொண்டு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து கொட்டாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், வாடகை கார் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொட்டாம்பட்டியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என முழு கடையடைப்பு மற்றும் உண்ணா விரத போராட்டத்திற்கு மனு அளித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று 50 கிராமங்களில் முழுகடையடைப்பு போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக கிராம மக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், பெண்கள் ஏராளமானோர் கொட்டாம்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டனர்.அப்போது போலீசார் தடுத்தும் கிராமமக்கள் காவல் நிலையம் அருகே திருச்சி- மதுரை சாலையில் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் மற்றும் தாசில்தார் சிவகாமி நாதன், மண்டல துணை தாசில்தார் லெட்சுமி பிரியா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், மதுரை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கொட்டாம்பட்டி திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. சென்னை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்ய போக்குவரத்துக்கு மைய பகுதியாக உள்ளது.

கொட்டாம்பட்டியில் உள்ள போலீஸ் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் 1919-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பயணியர் மாளிகை இன்றும் செயல்பட்டு வருகிறது. யூனியன் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார வளமையம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், பஸ் நிலையம், வாரச்சந்தை, வேளாண்மை இயக்குனர் அலுவலகம் என அனைத்துத்துறை அலுவலகமும் கொட்டாம்பட்டியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் அனைத்துத்துறை அலுவலகங்களின் ஒரே இடத்தில் இருக்கும் கொட்டாம்பட்டியை விரைவில் தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story