திருவண்ணாமலையில், விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் - 36 பெண்கள் உள்பட 120 பேர் கைது


திருவண்ணாமலையில், விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் - 36 பெண்கள் உள்பட 120 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 4:00 AM IST (Updated: 19 Nov 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 36 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

உயர் மின் கோபுரங்களையும், மின் வழி தடத்தையும், விவசாய விளை நிலங்கள் மீது அமைத்து விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதை கண்டித்தும், மாற்று ஏற்பாடு, இழப்பீடு, மாத வாடகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரே மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயத்தை நாசப்படுத்தும் உயர் மின் கோபுரங்களை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது. சாலை ஓரமாக கேபிள் மூலம் கொண்டு செல்ல மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். அமைக்கப்பட்ட மின் கோபுரம், மின் வழித்தடத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செல்போன் டவர் நிர்வாகங்கள் வழங்குவதுபோல் மாத வாடகை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி பயிர் இழப்பீடு, மரங்கள், கிணறுகள், கட்டிடங்கள் அனைத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் திடீரென திருவண்ணாமலை- போளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படாததால் போலீசார் 36 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story