சென்னை ரெயில் நிலையங்களில் நாய் தொல்லையால் பயணிகள் பீதி


சென்னை ரெயில் நிலையங்களில் நாய் தொல்லையால் பயணிகள் பீதி
x
தினத்தந்தி 18 Nov 2019 11:00 PM GMT (Updated: 18 Nov 2019 8:36 PM GMT)

சென்னை ரெயில் நிலையங்களில் நாய்கள் தொல்லை அதிகரிப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். ரெயில் நிலையத்தில் நாய்கள் சுற்றித்திரிவதை தடுக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களாக எழும்பூர் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையங்கள் திகழ்ந்து வருகின்றன. சென்னையை புறநகருடன் இணைக்கும் விதமாக மின்சார ரெயில் சேவையும் தெற்கு ரெயில்வே சார்பில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் புறநகர் ரெயில் நிலையங்களில் ஏராளமான நாய்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் மட்டுமே இருந்து வந்த நாய்கள் தற்போது ரெயில் நிலையங்களிலும் சர்வ சாதாரணமாக வலம் வந்து பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

பீதியில் பயணிகள்

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளுடன் செல்லும்போது நாய்கள் பின்தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். ரெயில் நிலையங்களில் பயணிகள் உணவு உண்ணும் போதும் நாய்கள் அருகே வந்து உணவை பிடுங்குவதாகவும், கடிக்க வருவது போல் அச்சுறுத்துவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் இடங்களில் நாய்கள் அங்கும் இங்கும் அலைவது மட்டுமில்லாமல் சிறுவர்களையும் துரத்தி வருகிறது. சென்னை கோட்டத்தில் உள்ள சில ரெயில் நிலையங்களில் பயணிகளை நாய்கள் கடித்ததாகவும் பயணிகள் கூறுகின்றனர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் இரவு நேரங்களில் வெளியே உள்ள நாய்களும் ரெயில் நிலைய வளாகத்துக்குள் வந்து அங்குள்ள பயணிகளை அச்சுறுத்துகின்றன. பயணிகளை அச்சுறுத்தும் நாய்களுக்கு, ரெயில் நிலையங்களில் உள்ள ஊழியர்களே உணவுகள் வழங்குவதாகவும் ரெயில் பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் கூறியதாவது:-

நான் தினமும் புறநகர் ரெயில் மூலம் வந்து செல்கின்றேன். இங்கு 6-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. சில நாய்கள் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து வருகிறது. உணவு பொட்டலங்களை பிரித்தவுடன் அருகே வந்து நின்று அச்சுறுத்துகின்றன. கடித்துவிடுமோ? என்ற பயத்திலேயே இருக்கவேண்டியது உள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து புகார் அளித்தும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் ரெயில் நிலையங்கள் நாய்கள் கூடாரமாக மாறுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story