கே.ஆர்.பேட்டை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது பா.ஜனதா வேட்பாளர் மீது செருப்பு வீச்சு எதிர்ப்பு கோஷம்-பரபரப்பு


கே.ஆர்.பேட்டை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது பா.ஜனதா வேட்பாளர் மீது செருப்பு வீச்சு எதிர்ப்பு கோஷம்-பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2019 5:35 AM IST (Updated: 19 Nov 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற பா.ஜனதா வேட்பாளர் நாராயணகவுடா மீது செருப்பு வீசப்பட்டது. மேலும் எதிர்ப்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நாராயணகவுடா பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய மந்திரி மாதுசாமி மற்றும் ஆதரவாளர்களுடன் கே.ஆர்.பேட்டை தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.

ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகர், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பி.எல்.தேவராஜூ ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருந்தனர். ஒரே நேரத்தில் 3 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஒன்றாக கூடியதால் தாலுகா அலுவலகம் முன்பு கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் சில மர்மநபர்கள் பா.ஜனதா வேட்பாளர் நாராயணகவுடா மீது செருப்பை வீசினர். மேலும் சிலர் மந்திரி மாதுசாமியை தள்ளியபடி சென்று நாராயணகவுடாவை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் மந்திரி மாதுசாமி, நாராயணகவுடா ஆகியோரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இருப்பினும் தாலுகா அலுவலகத்தின் வெளிப்புறத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பா.ஜனதா கட்சியின் கொடிகளை கிழித்து எறிந்தனர். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நாராயணகவுடா வெளியே வந்தார். அப்போது அங்கு இருந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் ‘பாம்பே திருடன்’ ‘பாம்பே திருடன்’ (எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதா தலைவர் களுடன் மும்பையில் இருந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டினர்) என்று கூச்சலிட்டனர்.

இதுகுறித்து நாராயணகவுடா ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் பி.எல்.தேவராஜூவின் சகோதரர் செருப்பு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மந்திரி மாதுசாமியை தாக்கிவிட்ட அவர்கள் சென்றனர். அரசியலை அரசியலாக தான் பார்க்க வேண்டும். அடிதடியில் ஈடுபடக்கூடாது. செருப்பால் தாக்குதல் நடத்த யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள்?.‘ என்றார்.

ஆனால், தன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று மந்திரி மாதுசாமி மறுத்தார். தன் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்றும், அவ்வாறு தாக்குதலை ஏற்றுக்கொண்டு அமைதியாக செல்லும் கோழைத்தனம் தனக்கு இல்லை என்றும் மந்திரி மாதுசாமி கூறினார்.

மேலும் நாராயணகவுடாவை முற்றுகையிட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நாராயணகவுடாவை பத்திரமாக போலீஸ் வாகனத்தில் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

முன்னதாக தாலுகா அலுவலகத்தில் 3 கட்சி வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் திரண்டு நின்றதால் ஒவ்வொருவரும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷங்கள் எழுப்பினர். மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜனதா பிரமுகர்களின் கார்களின் அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டதுடன் இருதரப்பு இடையே பிரச்சினை உருவானது. உடனே போலீசார் தலையிட்டு 2 தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பினர். இந்த சம்பவங்களினால் நேற்று கே.ஆர்.பேட்டை தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story