நாட்டிலேயே மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது முதல்-மந்திரி எடியூரப்பா பெருமிதம்


நாட்டிலேயே மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது முதல்-மந்திரி எடியூரப்பா பெருமிதம்
x
தினத்தந்தி 19 Nov 2019 12:09 AM GMT (Updated: 19 Nov 2019 12:09 AM GMT)

நாட்டிலேயே மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா பெருமிதத்துடன் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பெங்களூரு டெக் (தொழில்நுட்ப) மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் கர்நாடக தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த வாரியம், தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் செயல்படும். உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் கர்நாடகத்திற்கான இடத்தை தக்கவைக்க தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய தயாராக உள்ளது.

மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. ஆராய்ச்சி துறையிலும் கர்நாடகம் முன்னிலையில் இருக்கிறது. நிதி ஆயோக், ஆராய்ச்சித்துறையில் கர்நாடகம் முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் பெங்களூரு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதில் தலைநகரமாக திகழ்கிறது. ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு தேவையான திட்டங்களை செயல்படுத்தும்.

நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய உயர்தரமான மையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் பெங்களூரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து உள்ளது. தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட வளர்ச்சிக்கு அதிக ஆதரவு அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் பெங்களூரு உலக அளவில் சிறப்பிடம் பெறும் வகையில் தொழில்முனைவோர் பாடுபட வேண்டும். இவற்றுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story