2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளி: இடமாறுதல் கேட்டு தலைமை ஆசிரியை தர்ணா


2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளி: இடமாறுதல் கேட்டு தலைமை ஆசிரியை தர்ணா
x
தினத்தந்தி 19 Nov 2019 10:00 PM GMT (Updated: 19 Nov 2019 12:56 PM GMT)

2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாறுதல் கேட்டு, கலந்தாய்வில் அதிகாரிகள் முன்பு தரையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் புனித ஜான்பால் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பணியிட மாறுதலுக்கு 120 பேரும், பதவி உயர்வுக்கு 29 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது.

இதில் குஜிலியம்பாறை அருகேயுள்ள அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து இருந்தார். ஆனால், பள்ளியில் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறவில்லை என்று கூறி அவருடைய மனுவை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் அவர், கலந்தாய்வு நடக்கும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தார்.

இதற்கிடையே பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு குஜிலியம்பாறை வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது அய்யம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, மீண்டும் சென்று இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது அய்யம்பட்டி பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டதால், மாறுதல் வழங்க வேண்டும் என்றார்.

ஆனால் மே மாத கணக்குபடி 3 ஆண்டுகள் நிறைவு பெறாததால் பணியிட மாறுதல் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தலைமை ஆசிரியை இந்திரா, முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தரையில் படுத்தும் போராட்டம் நடத்தினார். இதையடுத்து போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தலைமை ஆசிரியையை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story