வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு பசுமையை பாதுகாக்க வேண்டும் - நடிகர் விவேக் பேட்டி
வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு பசுமையை பாதுகாக்க வேண்டும் என்று ஊட்டியில் நடிகர் விவேக் பேட்டி அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அரசின் விளம்பர தூதரும், நடிகருமான விவேக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர் விவேக் கூறியதாவது:-
நான் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடவு செய்து உள்ளேன். இன்று(அதாவது நேற்று) நீலகிரியில் 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பசுமையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஊர்வலம் ஊட்டி சேரிங்கிராசில் நடந்தது. இந்த ஊர்வலத்தை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வளைவில் திரும்பும்முன் சிக்னல் கொடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story