சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 5:29 PM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் நெருங்கி பழகினார். அதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து ஆசைவார்த்தை கூறி, கடந்த 2017-ம் ஆண்டு அந்த பெண் உள்பட சிலர் திருப்பூருக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், அங்குள்ள வீட்டின் அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த அச்சிறுமி நடந்ததையெல்லாம் பெற்றோரிடம் எடுத்து கூறி கதறி அழுதார். இது தொடர்பாக கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

7 பேர் கைது

அதன் பேரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் சட்டம், தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் சதி திட்டம் தீட்டி ஈடுபடுத்தியது, கடத்தி செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூர் குருநாதன் தெருவை சேர்ந்த குமுதவல்லி (வயது 36), வெங்கமேட்டை சேர்ந்த சரண்யா என்ற கலைசெல்வி (29), திருப்பூர் மாவட்டம் பெரியதாராபுரத்தை சேர்ந்த கல்பனா (32), வளையன்காட்டை சேர்ந்த சந்தனமாரி என்ற சந்தியா (39), காந்திநகரை சேர்ந்த பிரதாப் (29), பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் (36), புலுவப்பட்டி குதிரைகாரன் வளைவை சேர்ந்த மணி (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது கரூர் மகளிர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால், கரூர் மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி சசிகலா நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், குமுதவல்லிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் மற்றும் சரண்யா, கல்பனா, மணி ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் சந்தனமாரி, பிரதாப் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை, பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து கரூர் அனைத்து மகளிர் போலீசார், குமுதவல்லி, சரண்யா, கல்பனா, மணி, சிவக்குமார் ஆகிய 5 பேரையும் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story