உடுமலையில் நடைமேம்பாலம் அமைக்க குழிதோண்டும்போது குடிநீர் குழாய் உடைந்தது


உடுமலையில் நடைமேம்பாலம் அமைக்க குழிதோண்டும்போது குடிநீர் குழாய் உடைந்தது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 5:34 PM GMT)

உடுமலையில் நடைமேம்பாலம் அமைக்க குழி தோண்டும்போது குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை,

உடுமலை மத்திய பஸ்நிலையம், உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அதனால் எந்தநேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டிருக்கும். பகல் நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருக்கும். அத்துடன் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு நடந்து சாலையை கடந்து சென்று வருகின்றனர்.

அந்த நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மத்திய பஸ் நிலையத்தின் முன்பு சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு நடந்து செல்வதற்கு வசதியாக இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அங்கு லிப்ட் வசதியும் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகள் நடந்து வருகின்றன. அங்கு லிப்ட் வசதிக்காக பொக்லைன் மூலம் பெரியகுழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது அங்கு உள்ள நகராட்சி குடிநீர் குழாய் உடைந்தது. அதனால் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த குழிக்குள் தேங்கியது. இதைத்தொடர்ந்து குழிக்குள் தேங்கியிருந்த தண்ணீர் மின்மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. அத்துடன் குடிநீர் குழாய் உடைந்தது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அந்த குழாய் வழியாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

Next Story