சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பிணத்துடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பிணத்துடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 6:22 PM GMT)

சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் தரகம்பட்டியை அடுத்த பாலவிடுதி ஊராட்சி கவரப்பட்டியில் களம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதி மக்கள் கவரப்பட்டி வந்து செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லையென கூறப்படுகிறது. இதனால் இவர்கள் ஆற்றுவாரியை பாதையாக பயன்படுத்தி வந்தனர். இங்கு வசிப்பவர் களுக்கு களம் என்ற இடத்தின் அருகிலேயே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 48) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலை அங்கிருந்து அரசு அமரர் ஊர்தியில் எடுத்து வந்து நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் பாலவிடுதி போலீஸ் நிலையம் முன்பு வைத்தனர். எங்களது பகுதிக்கு செல்வதற்கும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தான் சந்திரசேகரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் தான் அவர் உயிரிழந்தார் என கூறி, சந்திரசேகரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த கரூர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், சப்- கலெக்டர் சேக் அப்துல் ரகுமான், தாசில்தார் மைதிலி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் நில அளவையரை கொண்டு அளவீடு செய்து பாதை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து கவரப்பட்டிக்கு சென்றனர். அங்கு சம்பந்தப்பட்ட நபரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் அவர் தன்னுடைய பட்டா நிலத்திற்குள் வரக்கூடாது என உறுதியாக இருந்தார்.

பின்னர் நில அளவையரைக் கொண்டு அளவீடு .செய்யும் பணி தொடங்கியது. இருப்பினும் அதிகாரிகள் தற்காலிகமாக ஆற்றுவாரியை சரி செய்து ஆற்றுவாரி வழியாக உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story