சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடு, கடைகள் இடித்து தரைமட்டம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடு, கடைகள் இடித்து தரைமட்டம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 6:37 PM GMT)

திருச்சி கிராப்பட்டியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 64 வீடு மற்றும் கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. 4 வழிச்சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

திருச்சி,

திருச்சி மாநகரில் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் ஓட்டல்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து தரைமட்டமாக்கி இடிபாடுகளை அகற்றி வருகிறார்கள். அதன்படி, முதல் கட்டமாக திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் அருகே சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை போலீஸ் பாதுகாப்புடன் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன.

அடுத்த கட்டமாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாலத்தில் இருந்து கிராப்பட்டி-எடமலைப்பட்டி ரெயில்வே பாலத்திற்கு இடைப்பட்ட மதுரை சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையின் வலதுபுறம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகளை அவற்றின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்டம் சார்பில் இடித்து அகற்றப்படும் என்றும் கடந்த ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில், ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட்டு நீதிபதி, நெடுஞ்சாலைத்துறையினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவு நகலை இணைத்து, கிராப்பட்டி சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தில் இருந்த 34 கடைக்காரர்களுக்கும், 30 வீடுகளின் உரிமையாளர்களும் திருச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு தொடர்ந்து இருந்து வந்தனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி-மதுரை கிராப்பட்டி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 34 கடைகள், 30 வீடுகளை அகற்றுவதற்காக 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது உறுதி என்பதை அறிந்ததும் சில கடைக்காரர்களும், வீட்டில் உள்ளவர்களும் தாமாகவே பொருட்களை அப்புறப்படுத்த தொடங்கினர். ஆனால், சிலர் ெபாருட்களை அகற்றவில்லை.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி கோட்ட பொறியாளர் கிரு‌‌ஷ்ணசாமி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் வீரமணி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டதால் கிராப்பட்டி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு பொதுமக்கள் திரண்டு, ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க தொடங்கினர். இத்தனை ஆண்டுகளாக இருந்த கடைகள், வீடுகள் எல்லாம் ஆக்கிரமித்து கட்டப்பட்டதுதானா? என்று பேசிக்கொண்டனர். நகரில் இதேபோல் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்கு வரத்துக்கு எவ்வித இடையூறும் இருக்காது என்று தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது சாலையோர ஆக்கிரமிப்பில் 2 கார் பட்டறைகள், ஓட்டல்கள், மளிகைக்கடை மற்றும் கான்கிரீட் வீடுகள், குடிசை உள்ளிட்ட 64 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டன. மேலும் சாலையோரத்தில் சர்வசக்தி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலின் கருவறை உள்ளிட்ட கட்டிடம் ரெயில்வேக்கு சொந்தமான இடத்திலும், கோவில் முகப்பு தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பிருந்த சிமெண்டு தரைத்தளம் பொக்லைன் எந்திரத்தால் தோண்டி அப்புறப்படுத்தப்பட்டது. கோவிலின் வெளிப்பிரகார சுற்றுச்சுவரும் இடித்து தள்ளப்பட்டது. மேலும் அதன் அருகில் பீடம்போல அமைத்து மாதா ஆலயம் ஒன்றும் வழிபாட்டில் இருந்தது. அந்த ஆலயம் முழுமையாக அகற்றப்பட்டது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘திருச்சி-மதுரை கிராப்பட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக்கோரி 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரே, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலையானது, விரைவில் 4 வழிச்சாலையாக விஸ்தரிக்கப்படுகிறது. 4 வழிச்சாலையின் நடுவே தடுப்புச்சுவர்(சென்டர் மீடியன்) ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் போவதற்கும், வருவதற்கும் என இருபிரிவாக சாலை அமைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக எடமலைப்பட்டிபுதூரிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் உள்ளிட்டவை உள்ளன. அங்கும் முறைப்படி, உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும்’’ என்றனர்.

Next Story