பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 6:45 PM GMT)

பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட மெய்யூர், வெம்பேடு, ராஜபாளையம் பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மெய்யூர் ஊராட்சியில் அடங்கிய வெம்பேடு, ராஜபாளையம் போன்ற கிராமங்களில் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு நாங்கள் பயிர் செய்தோம். போதிய மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து போனது.

புகார் மனு

நாங்கள் அனைவரும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தோம். எங்களுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இது நாள் வரையிலும் எங்களுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கப்பட வில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த எங்கள் அனைவருக்கும் பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னர் விவசாயிகள் இது தொடர்பான புகார் மனுவை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story