சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 10:45 PM GMT (Updated: 19 Nov 2019 6:57 PM GMT)

சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி,

பொன்னேரி தாலுகாவில் தலைமையிடமாக கச்சேரி பகுதி விளங்குகிறது. இந்த கச்சேரி சாலையில் தாசில்தார் குடியிருப்பு, மாஜிஸ்திரேட்டு குடியிருப்பு, நில அளவையர் அலுவலகம், சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், போலீஸ்நிலையம், தாலுகா அலுவலகம், ஆர்.டி..ஓ. அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மாணவர்கள் விடுதி, கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் வணிகவரித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

இந்த சாலையின் வழியாக பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியிடங்களுக்கு மின்சார ரெயில் மூலம் சென்று திரும்பு கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தாலுகாவின் தலைமையிடம் என்பதால் தங்கள் பணிக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். மேலும் சாலையின் இரு புறங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இது குறித்து பொன்னேரி வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story