குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம்


குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 7:02 PM GMT)

குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கோடை நெல் சாகுபடியும் செய்யப்படும். இதுபோக கரும்பு, வாழை, எள், உளுந்து, மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் முன்பு 15 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் நாளடைவில் சாகுபடி பரப்பு குறைந்து தற்போது 4 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்தாலும் விவசாயிகளால் உடனடியாக அறுவடை செய்ய முடியாது. தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் எப்போது அரவை தொடங்கப்படும் என காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரவை தொடங்கப்பட்டால் தான் கரும்பு அறுவடை பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரவை பணி தொடங்கப்பட்டது.

ஏமாற்றம்

ஆனால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அரவை பணியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று கடந்த 11-ந் தேதி அரவை பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தஞ்சையை அடுத்த குருங்குளம், தோழகிரிப்பட்டி, திருக்கானூர்பட்டி, அற்புதபுரம், மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் அரவை பணி தொடங்காத காரணத்தினால் அறுவடை பணியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

இது குறித்து கரும்பு விவசாயி தோழகிரிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராசு கூறும்போது, கரும்பு நடவு செய்யப்பட்ட 10 மாதத்தில் நன்கு வளர்ச்சி அடைந்துவிடும். 10 மாதம் முதல் 12 மாதத்திற்குள் அறுவடை செய்யப்பட்டால் மகசூல் நன்றாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். இதற்காக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அரவை பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு தற்போது அதை நிறைவேற்றவில்லை. குருங்குளம் சர்க்கரை ஆலையில் 3 எந்திரங்கள் உள்ளன. இவற்றில் ஒரு எந்திரம் பழுதடைந்துள்ளது.

வெட்டுக்கூலி உயரும்

இதற்கு தேவையான உபகரணங்கள் புனேயில் கிடைக்கும் எனவும், வருகிற 23-ந் தேதி உபகரணங்கள் ஆலைக்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் தான் பணி தொடங்கப்படும். இதனால் கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும். வெட்டுக்கூலியும் உயரும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் அரவை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதைவிட குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. கரும்புக்கான விலையை மத்தியஅரசு டன்னுக்கு ரூ.2,612 அறிவித்துள்ளது. தமிழகஅரசு ரூ.137 ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. விலை குறைவாக இருப்பதால் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

Next Story