சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்கள் கைது


சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோவில் அகற்றம் எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்கள் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 9:19 PM GMT)

சேலம் அம்மாபேட்டையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 32 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை கிரு‌‌ஷ்ணன்புதூரில் அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்து அதில் சீட் அமைத்து காளியம்மன் கோவில் கட்டப்பட்டு இருந்தது. இந்த அம்மன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரி சனம் செய்து வந்தனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் அதிகம் வந்து வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கோவில் கட்டப்பட்டு உள்ளது என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனவே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோவிலை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இடித்து அகற்றம்

இதையொட்டி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோவிலை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்போது கோவிலை இடிக்க பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 32 பெண்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பர பரப்பு நிலவியது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

அம்மன் சிலை

மாநகராட்சிக்கு சொந்தமான 100 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து அம்மன் கோவில் கட்டப்பட்டு இருந்தது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவில் இடித்து அகற்றப்பட்டது. கோவிலில் இருந்த அம்மன் சிலையை சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story