சரியாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்


சரியாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 9:24 PM GMT)

நெமிலி அருகே தலைமை ஆசிரியர் சரியாக பள்ளிக்கு வராததை கண்டித்து, பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பனப்பாக்கம்,

நெமிலியை அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக புவியரசு, உதவி ஆசிரியையாக சுகுணாசெல்வக்குமாரி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை 82 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் புவியரசு சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 2 உதவி ஆசிரியர்கள் இருக்கவேண்டும், ஆனால் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால் ஒரு உதவி ஆசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கிறது.

இதனால் உதவி ஆசிரியை சுகுணாசெல்வக்குமாரியால் 82 மாணவர்களையும் சரியாக கவனிக்க முடிவதில்லை. எனவே தலைமை ஆசிரியர் புவியரசு பள்ளிக்கு சரியாக வராதது குறித்து மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நெமிலி வட்டார கல்வி அலுவலகத்தில் பலமுறை மனுகொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தலைமை ஆசிரியர் புவியரசு சரியாக பள்ளிக்கு வருவதில்லை, மேலும் குடித்துவிட்டு வருகிறார். அவர் மாணவர்களுக்கு எந்த பாடமும் நடத்துவதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே தலைமை ஆசிரியர் புவியரசை இங்கிருந்து வேறு பள்ளிக்கு மாற்றி விட்டு புதிய தலைமை ஆசிரியரை நியமிக்கவேண்டும், காலியாக இருக்கும் உதவி ஆசிரியர் பணியிடத்தையும் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் சி்றிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story