வடலூரில் பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம் ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் பரபரப்பு தகவல்கள்


வடலூரில் பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம் ரவுடி கொலையில் 4 பேர் பிடிபட்டனர் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 9:38 PM GMT)

வடலூரில் ரவுடி பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் 4 பேர் பிடிபட்டனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வடலூர்,

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர்கள் சுந்தர், முரளி. ரவுடிகளான இவர்கள் இருவரும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதில் யார் பெரியவர்? என்ற போட்டியில் கடந்த 15.2.2017 அன்று முரளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், பாண்டியன் மகன் அமரன்(வயது 24). 17 வயது சிறுவன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தட்டாஞ்சாவடி செந்தில், அமரன் ஆகியோர் மட்டும் விடுவிக்கப்படாமல் ஜெயிலில் இருந்து வந்தனர்.

இந்த கொலை வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சுந்தர், அமரன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி சுபாஅன்புமணி உத்தரவிட்டார்.

வெட்டிக்கொலை

இதையடுத்து அமரன் சிறையில் இருந்து வெளியே வந்தார். எதிர்தரப்பு ரவுடிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய அமரன் தஞ்சாவூர் அருகே சிறிய கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வது என முடிவு செய்தார். அதன்படி அமரனை அவரது தந்தை பாண்டியன், மைத்துனர் உதயகுமார் ஆகியோர் தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் இரவு காரில் அழைத்து சென்றனர். காரை தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டினார்.

கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு கார் நின்றது. பின்னர் உதயகுமார், பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் காரில் இருந்து இறங்கி டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் வாங்க சென்றனர். அமரன் மட்டும் காரில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. திடீரென அமரனை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. சத்தம் கேட்டு பாண்டியன், உதயகுமார் ஆகியோர் ஓடிவந்தனர். தடுக்க முயன்ற பாண்டியனையும் வெட்டி விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச் சென்றனர். தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் அமரன் இறந்துபோனார். பாண்டியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீர்ப்பு வந்தவுடன் கொலை

இந்த பயங்கர சம்பவம் பற்றி வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி முரளி கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது ஆதரவாளர்கள் ரவுடி அமரனை பின்தொடர்ந்து வந்து சந்தர்ப்பம் பார்த்து கொலை செய்து விட்டு தப்பி இருப்பது தெரியவந்துள்ளது. ரவுடி முரளி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கொலையாளிகள் அமரனை பழி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிப்பதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். கொலையாளிகளை நேரில் பார்த்த அமரனின் தந்தை பாண்டியன் உள்ளிட்ட மேலும் சிலரிடம் விசாரித்தனர். அவர்கள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

4 பேர் பிடிபட்டனர்

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் முகாமிட்டு சிலரை தேடி வந்தனர். இவர்களில் மடுவுபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பார்த்திபன் (வயது29), குமரகுரு பள்ளம் ஏழுமலை மகன் சரவணன் (28), புதுப்பேட் சங்கர் மகன் சதீஷ் (26) உள்பட 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க புதுச்சேரி மற்றும் வடலூரில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Next Story