வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்: அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்: அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 19 Nov 2019 9:43 PM GMT (Updated: 19 Nov 2019 9:43 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம், தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் கியூ- சர்டிபிகேட் திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிதம்பரம் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் புதிதாக தொழில் தொடங்கினால் அதில் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும். அந்நிறுவனங்களின் மின் கட்டணத்தில் 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மின் மானியமும், புதிதாக மின்னாக்கி வாங்கி நிறுவும் நிறுவனங்களுக்கு மின்னாக்கி மதிப்பில் 25 சதவீதம் மின்னாக்கி மானியமாகவும் வழங்கப்படும்.

ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் அல்லது ரூ.75 ஆயிரத்திற்கு மிகாமல் ஆற்றல் தணிக்கை மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் புதிதாக தொடங்கும் தொழில் முனைவோருக்கு குறித்த காலத்திற்குள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளரத்கதவு இணையதளம் மூலமாக விரைவாக ஒப்புதல் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் 3 பேருக்கு புதிய தொழில் தொடங்க ரூ.15¼ லட்சம் மானியத்துடன் சுமார் ரூ.82 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

முகாமில் முன்னோடி வங்கி மேலாளர், வங்கி அதிகாரிகள், திருவண்ணாமலை தொழில் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story