திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தில் திடீர் பள்ளம்: உடனடியாக சீரமைக்க - வாகன ஓட்டிகள் கோரிக்கை


திருப்பரங்குன்றம் ரெயில்வே மேம்பாலத்தில் திடீர் பள்ளம்: உடனடியாக சீரமைக்க - வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 10:35 PM GMT (Updated: 19 Nov 2019 10:35 PM GMT)

திருப்பரங்குன்றம் ெரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் முதல் தேவிநகர் வரை உள்ள ெரயில்வே மேம்பாலத்தின் மையத்தில் பாலத்தின் உறுதிதன்மையை நிலைப்படுத்தக்கூடிய திடமான கம்பி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கம்பியை சார்ந்துள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவ்வப்போது தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயமுற்று மருத்துவமனைக்குச் செல்லும் அவலம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாலத்தின் மையப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறிய பள்ளம் திடீரென்று உருவானது. அதில் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வந்ததால் சிறிய பள்ளமானது பெரிய பள்ளமாக மாறியது. அதிலும் வாகனங்கள் தொடர்ந்து சென்று வந்ததையடுத்து தற்போது ஆழ்துளை கிணற்றில் உள்ள குழி போல ஆபத்தான பள்ளமாக உருவெடுத்துள்ளது.

பாலத்தின் கீழ் இருந்து மேல்நோக்கி பாலத்தை பார்த்தால் பெரும் பள்ளமாக தெரிகிறது. அதேபோல பாலத்தின் மேல் பகுதியிலிருந்து அந்த ஓட்டை வழியாக கீழே உற்று நோக்கி பார்த்தால் தரைப்பகுதி தெளிவாக தெரிகிறது.

எனவே இந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சென்று வரும் பட்சத்தில் திடீர் பள்ளத்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் இந்த ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அந்தப் பாலம் முழுவதும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெடிப்பு, பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story