பெங்களூரு அருகே ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிய கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு


பெங்களூரு அருகே ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிய கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:47 AM IST (Updated: 20 Nov 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவியை கீழே தள்ளிய கண்டக்டரை பணி இடைநீக்கம் செய்து கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் கனகபுரா டவுனை சேர்ந்தவர் பூமிகா(வயது 16). இவர் பெங்களூரு எலச்சனஹள்ளியில் உள்ள பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு(கே.எஸ்.ஆர்.டி.சி.) சொந்தமான பஸ்சில் சென்று வருகிறார். இதற்காக அவர் மாணவ-மாணவிகளுக்கான சலுகை விலை பஸ்பாஸ் எடுத்து வைத்துள்ளார்.

சம்பவத்தன்று இவர் எலச்சனஹள்ளியில் இருந்து கனகபுராவுக்கு செல்ல கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் வாங்கி கொள்ளும்படி கண்டக்டர் அவரிடம் கூறினார். இதை கேட்ட பூமிகா தன்னிடம் மாணவர்களுக்கான பஸ்பாஸ் உள்ளது என்று கூறி அதை எடுத்து காண்பித்தார். அப்போது ‘இந்த பஸ் நீண்டதூரம் செல்கிறது. இந்த பஸ்சுக்கு பஸ்பாஸ் செல்லாது. டிக்கெட் எடுத்து கொள்‘ என்று கூறினார்.

இதைக்கேட்ட பூமிகா அடுத்த பஸ் நிலையத்தில் தான் இறங்கி கொள்வதாக தெரிவித்தார். இதற்கு கண்டக்டர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக ஆத்திரமடைந்த கண்டக்டர் ஓடும் பஸ்சில் இருந்து பூமிகாவை கீழே தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் இருந்து கீழே விழுந்த பூமிகாவின் பற்கள் உடைந்தன. மேலும் நெற்றி உள்பட சில இடங்களில் அவர் காயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பூமிகாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் கடந்த 11-ந் தேதி நடந்தது. சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பூமிகா சம்பவம் குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது மாணவியை கீழே தள்ளிய கண்டக்டரின் பெயர் சிவசங்கர் என்பதும், அவர் ஆரோஹள்ளி டெப்போவில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதுபற்றி கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசாத் கூறுகையில், ‘மாணவி சென்ற பஸ்சில் பஸ்பாஸ் பயன்படுத்த முடியாது. இருப்பினும் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியை கீழே தள்ளியது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது‘ என்றார்.

அத்துடன் சம்பவம் குறித்து கோனனகுண்டே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, விசாரணைக்கு ஆஜராகும்படி கண்டக்டர் சிவசங்கருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

Next Story