இடைத்தேர்தலில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு?


இடைத்தேர்தலில் கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு?
x
தினத்தந்தி 20 Nov 2019 4:55 AM IST (Updated: 20 Nov 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில், கே.ஆர்.பேட்டை தொகுதியில் சுமலதா எம்.பி.யின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

நாடாளுமன்றத்திற்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியான நடிகை சுமலதா, சுயேச்சையாக போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய முதல்-மந்திரியான குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார்.

இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பேட்டை சட்டசபை தொகுதி உள்பட 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கே.ஆர்.பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ. நாராயணகவுடா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவராஜ், காங்கிரஸ் சார்பில் கே.பி.சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுமலதாவை தனித்தனியாக நேரில் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளனர். சுமலதா இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு பா.ஜனதா பகிரங்கமாக ஆதரவு வழங்கியது.

பிரதமர் மோடியும் அவருடைய பெயரை குறிப்பிட்டு வாக்குகளை கேட்டு பிரசாரம் செய்தார். அதனால் சுமலதா எம்.பி. பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார்.

Next Story