முப்பரிமாண வடிவமைப்புடன் புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள் சென்னை மாநகராட்சி திட்டம்


முப்பரிமாண வடிவமைப்புடன் புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள் சென்னை மாநகராட்சி திட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 5:49 PM GMT)

குழந்தைகளை கவரு வதற்காக அங்கன்வாடி மையங்களை முப்பரிமாண வடிவமைப்புடன் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை,

மனிதனுடைய முக்கிய பருவம் குழந்தைப்பருவம். இந்த குழந்தை பருவத்தை பராமரிப்பதற்காக உருவாகப்பட்டதுதான் அங்கன்வாடி மையங்கள். பிறந்த குழந்தைகள் உணவு கிடைக்காமல் பசியால் வாடி உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது.

குழந்தை பிறந்து நடக்க ஆரம்பித்ததுமே பெற்றோர், அவர்களை அங்கன்வாடி மையங்களில் சேர்த்து விடுகின்றனர். குழந்தைகள் தங்களது ஆரம்ப கால கல்வி கற்றுக்கொள்வதற்கான சூழலை அங்கன்வாடி மையங்கள் அமைத்துக்கொடுக்கிறது. தமிழகத்தில் காணப்படும் அங்கன்வாடி மையங்கள் பெரும்பாலும் பழமையான கட்டிடங்களாகவே காணப்படுகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம்

இந்தநிலையில் சென்னை மாநகராட்சியில் அங்கன்வாடி மையங்கள் புதுபிக்கும் முயற்சி நடந்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை கவரவும், அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நவீன வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மையங்கள் கட்டவும், பல்வேறு வடிவமைப்பிலான கட்டிட மாதிரிகளை சென்னை பெருநகர மாநகராட்சி உருவாக்கி உள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 1,806 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

இந்த மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டவும், பழைய அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி கட்டிடப் பிரிவினர் புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் பழைய அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்புகள் அடங்கிய பல்வேறு வடிவமைப்பிலான முப்பரிமாண கட்டிட மாதிரிகளை உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முப்பரிமாண கட்டிட மாதிரிகள்

எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம், அங்கன்வாடி மையங்களுக்கு செலவிட வேண்டும். அதன் அடிப்படையில், அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள், பழைய அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்புகள் தொடர்பாக 11 முப்பரிமாண கட்டிட மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு நிறங்களில் வெளி மற்றும் உட்புறச் சுவர்கள், விலங்குகளின் வரைபடங்கள், இருக்கைகள், மின்விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி தொடர்பான நவீன சாதனங்கள் ஆகியவை இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வரைபடங்களில் ஏதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தாங்களே தேர்வு செய்து, அங்கன்வாடி மையத்தை மேம்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story