உத்திரமேரூர் அருகே பிளஸ்-2 மாணவியை இடுப்பில் சுமந்து படிக்க வைக்கும் தாய்


உத்திரமேரூர் அருகே பிளஸ்-2 மாணவியை இடுப்பில் சுமந்து படிக்க வைக்கும் தாய்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே பிளஸ்-2 மாணவியை பள்ளிக்கு இடுப்பில் சுமந்து சென்று தாய் படிக்க வைக்கிறார்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருங்கோழி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 38). இவருக்கு சரவணன் என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர்களது மகள் திவ்யா (17). பிறக்கும் போதே கால்கள் இரண்டும் சூம்பிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் சரவணன் பத்மாவதியை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டார். பத்மாவதி கூலி வேலைக்கு சென்று தனது மகளை வளர்த்து வந்தார்.

தொடக்க கல்வியை தனது சொந்த ஊரில் கற்ற மாற்றுத்திறனாளியான திவ்யா தற்போது உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கல்வியிலும் அறிவு கூர்மையிலும் சிறந்து விளங்குகிறார்.

இடுப்பில் சுமந்து சென்று

தினமும் திவ்யாவை அவரது தாயார் பத்மாவதி 2 கிலோமீட்டர் தூரம் இடுப்பில் சுமந்துவந்து அரசு பஸ்சில் ஏற்றி உத்திரமேரூர் அழைத்து வருகிறார். உத்திரமேரூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று பள்ளியில் விட்டுவிட்டு அங்கேயே இருக்கிறார்.

மகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து விட்டு மீண்டும் மாலை பள்ளிமுடிந்ததும் மகளை தூக்கிக்கொண்டு அதேபோன்று நடைபயணமாக வீட்டுக்கு செல்கிறார்.

கோரிக்கை மனு

இவ்வாறு மகளுடன் பள்ளிக்கு சென்று வருவதால் கூலி வேலைக்குக்கூட செல்லமுடியாமல் வறுமையில் வாடும் பத்மாவதி தன் மகளை எப்படியாவது படிக்கவைக்கவேண்டும் என்ற கனவோடு உள்ளார். திவ்யாவுக்கு எப்படியாவது மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தால் அவரே தன்னை எதிர்பார்க்காமல் பள்ளிக்கு சென்றுவருவார். தானும் கூலிவேலைக்கு சென்று மகளை காப்பாற்றலாம் என்ற ஏக்கத்தோடு பல்வேறு இடங்களில் உதவிகளை கேட்டு வருகிறார். மாவட்ட கலெக்டருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை கொடுத்து கண்ணீரோடு காத்து கிடக்கிறார் பத்மாவதி.

தங்களுக்கு உதவி செய்யும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திவ்யாவும், அவரது தாயார் பத்மாவதியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story