குத்தகை காலம் முடிந்துவிட்டதால் பெங்களூரு குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த தடை சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் எச்.கே.பட்டீல் பேட்டி
குத்தகை காலம் முடிந்துவிட்டதால், பெங்களூரு குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் எச்.கே.பட்டீல் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் எச்.கே.பட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வாடகை பாக்கி
பெங்களூருவில் உள்ள குதிரை பந்தய மைதானம் குறித்து இந்திய கணக்கு தணிக்கை குழு வழங்கிய அறிக்கை மற்றும் 12-வது சட்டசபை பொது கணக்கு குழு சிபாரிசுகள் குறித்து எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கர்நாடக அரசுக்கு பெங்களூரு குதிரை பந்தய மைதான நிர்வாகம் தனது மொத்த வருவாயில் இருந்து 2 சதவீதத்தை ஆண்டு வாடகையாக செலுத்த வேண்டும்.
அதில் 2010-11-ம் ஆண்டில் இருந்து 2017-18-ம் ஆண்டு வரை ரூ.32 கோடியே 86 லட்சத்து 99 ஆயிரத்து 102 வாடகை பாக்கியை குதிரை பந்தய மைதான நிர்வாகம் செலுத்த வேண்டும். 1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை கூட அந்த மைதான நிர்வாகம் வாடகை செலுத்தவில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தை அந்த நிர்வாகம் வழங்கி வந்துள்ளது.
குத்தகை காலம்
இதனால் மாநில அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுடன் குதிரை பந்தய மைதானத்தின் குத்தகை காலம் முடிவடைந்துவிட்டது. அதன் பிறகு அந்த மைதானத்தை சட்டவிரோதமாக அதன் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. 1968-ம் ஆண்டு முதல் அந்த மைதானத்தை அரசே ஏற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த 2010-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு, அந்த மைதானத்தை அரசுக்கு ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அரசு அதிகாரிகள், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் குதிரை பந்தய மைதான நிர்வாகத்திடம், அரசுக்கு வரவேண்டிய வாடகையை அடுத்த மாதம்(டிசம்பர்) 1-ந் தேதிக்குள் வசூலிக்க வேண்டும், 2-ந் தேதிக்கு பிறகு அந்த இடத்தில் குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த தடை விதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அறிக்கை தாக்கல்
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக முடிக்க ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த குழுவின் அடுத்த கூட்டத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story