4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பெங்களூருவில் 150 ரவுடிகளுக்கு எச்சரிக்கை
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பெங்களூருவில் நேற்று முன்தினம் 150 ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு நகரில் சிவாஜிநகர், கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்தமாதம்(டிசம்பர்) 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதோடு, டிசம்பர் மாதம் 9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
பெங்களூரு நகரில் உள்ள 4 தொகுதிகளில் அமைதியான முறையில் இடைத்தேர்தலை நடத்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக ரவுடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
150 ரவுடிகளுக்கு எச்சரிக்கை
அதன்படி நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணி முதல் பானசவாடி, ராமமூர்த்தி நகர், ஹெண்ணூர், காடுகொண்டனஹள்ளி, தேவரஜீவனஹள்ளி உள்பட 6 போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரவுடிகளை போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று பிடித்தனர். இவ்வாறு பிடிப்பட்ட 150 ரவுடிகளை போலீசார் காசரகானஹள்ளியில் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் இடைத்தேர்தலில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் சட்டவிரோத செயல்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரவுடிகளின் செல்போன் எண்கள், அவர்கள் தற்போது செய்துவரும் தொழில் உள்பட பல்வேறு விவரங்களை போலீசார் கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story