சென்னிமலை அருகே உயர்மின் கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு


சென்னிமலை அருகே உயர்மின் கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 7:50 PM GMT)

சென்னிமலை அருகே உயர் மின்கோபுரங்களில் மின் கம்பி பொருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பயிர் இழப்பீடு வழங்காததால் தடுத்து நிறுத்தினர்.

சென்னிமலை,

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகில் உள்ள ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம், பாலவாடி வரை சுமார் 195 கி.மீ தூரத்திற்கு உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

ஆனால் விவசாயிகள் தங்களுக்கு போதுமான நஷ்ட ஈடு கொடுத்த பிறகே பணிகளை தொடங்க வேண்டும் எனக்கூறி பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் பணிகள் நடைபெறாமல் இருந்தது.

மின்கம்பி பொருத்தும் பணி

தற்போது சென்னிமலையை அடுத்த சென்னியங்கிரிவலசு என்ற கிராமம் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயர் மின்கோபுரங்களில் மின் கம்பிகளை பொருத்தும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். அதேபோல் நேற்றும் பணி நடந்தது.

இந்த நிலையில் தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி மற்றும் விவசாயிகள் மதியம் 2 மணி அளவில் திடீரென அங்கு சென்றனர்.

தடுத்து நிறுத்தம்

பின்னர் அவர்கள் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் பணிகளை செய்யக்கூடாது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலங்களில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து மின் வாரிய ஊழியர்கள் பணிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே நிலத்திற்கு போதுமான நஷ்ட ஈடு வழங்காத நிலையில் தற்போது பயிர்களையும் அழித்து பணிகளை செய்கின்றனர்.

நஷ்டஈடு

மேலும், ஏற்கனவே மின் கம்பி பொருத்தப்பட்ட பகுதியில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. மின் கம்பி மற்றும் மின்கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு எவ்வளவு என்று இதுவரை தெரிவிக்கவில்லை. இதற்கு மின் வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனர்.

Next Story