மொபட் ஓட்டிச்சென்ற 13 வயது மாணவி, லாரி மோதி பலி உறவினர்கள் சாலை மறியல்


மொபட் ஓட்டிச்சென்ற 13 வயது மாணவி, லாரி மோதி பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 8:35 PM GMT)

மொபட் ஓட்டிச் சென்ற 13 வயது மாணவி நான்கு வழிச்சாலையை கடந்த போது லாரி மோதி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை அருகே பெருங்குடி வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. அவருடைய மகள் திவ்யா (வயது 13). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று காைல 8 மணி அளவில் தனது தந்தையை அழைத்து வருவதற்காக, மொபட்டில் சென்று கொண்டிருந்தாள். மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடந்த போது, தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மாணவியின் மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டுடன் சிறுமி திவ்யா சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாள்.

மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த விபத்தை கண்ட அப் பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

அந்த லாரியை முற்றுகையிட்டு அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திவ்யாவின் குடும்பத்தினரும் ஓடிவந்தனர். சாலையில் கிடந்த உடலை பார்த்து அவர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் மாணவியின் உடலை எடுக்க விடாமல் அந்த பகுதி மக்கள் தடுத்ததுடன், நான்கு வழிச்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மாணவியின் உடலை எடுக்க விடுவோம் என்று தெரிவித்துவிட்டனர். இதனால் போராட்டம் தொடர்ந்ததுடன் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தாசில்தார் நாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அப்பகுதி மக்கள் கூறுகையில், “நான்கு வழிச்சாலையில் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பல முறை மனு கொடுத்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாதவாறு, தடுக்க இந்தப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் ஏற்பட்டதால், அதன் பின்னர் மறியலை அனைவரும் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின்னர், மாணவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த போராட்டத்தால் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற டிரைவரை தேடிவருகின்றனர்.

Next Story