மாவட்டத்திற்கு ரூ.12ஆயிரம் கோடியில் காவிரி தண்ணீர் கொண்டு வர முதல்-அமைச்சரிடம் கோரிக்கை அமைச்சர் தகவல்


மாவட்டத்திற்கு ரூ.12ஆயிரம் கோடியில் காவிரி தண்ணீர் கொண்டு வர முதல்-அமைச்சரிடம் கோரிக்கை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 8:41 PM GMT)

மாவட்ட மக்களின் தேவைக்காக ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமுதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

தேவகோட்டை,

தேவகோட்டையில் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் கலெக்டரின் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

இந்த சிறப்பு முகாமில் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வேளாண்மை துறை சார்பில் சோலார் ட்ராப், ரெயின்போ ஆகியவை, மானியம் மூலம் அம்மா இருசக்கர வாகனம், வங்கி கடன் இணைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் சமுதாய முதலீட்டு நிதி, மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர், சிறு வணிக கடன், பயிர்கடன், மகளிர் சுய உதவி குழு கடன், தையல் எந்திரம் என 976 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து துறை அதிகாரிகளை தீவிரமாக முடக்கி விடப்பட்டு அதன் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காவிரி-குண்டாறு

இதேபோல் ஒவ்வொரு வாரமும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையானவற்றை செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்று கூறப்பட்டாலும் அவற்றை வறட்சி இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு முதல்-அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். குறிப்பாக காவிரி-குண்டாறு திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு காவிரி நீரை கொண்டு வருவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதை முதல்-அமைச்சரும் பரிசீலனை செய்து ரூ.12 ஆயிரம் கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி மொழி அளித்துள்ளார். இதன் மூலம் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் இருந்து விடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ஆவின் தலைவர் அசோகன், தேவகோட்டை முன்னாள் யூனியன் தலைவர் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம், புதுகுறிச்சி நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் காரைக்குடியில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார். 

Next Story