தொடர் மழையால் சாயல்குடி பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்


தொடர் மழையால் சாயல்குடி பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:15 AM IST (Updated: 21 Nov 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் சாயல்குடி பகுதியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் சாயல்குடி, சிக்கல், ஏர்வாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் கண்மாய்,குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போனதுடன் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. மேலும் மக்கள் குடிதண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து கஷ்டப்படுகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளாக சாயல்குடி,மேலச்செல்வனூர்,சிக்கல்,இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளில் விவசயாம் அடியோடு நடைபெறவில்லை.இதனால் விவசாயிகள் மிகுந்த சோகத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை நன்கு பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சாயல்குடி,சிக்கல்,இதம்பாடல்,ஏர்வாடி,கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி,இதம்பாடல் சிக்கல்,மேலச்செல்வனூர்,கீழச்செல்வனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளில் விவாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தீவிரம்

கட்டாந்தரையாக காட்சியளித்து வந்த விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது விதை நெல் தூவி அவை தற்போது நன்கு வளர தொடங்கி உள்ளதால் விவசாய நிலங்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளித்து வருகின்றன. விவசாய நிலங்களில் பயிர்களோடு வளர்ந்து நிற்கும் களைகளை அகற்றும் பணியிலும், உரம் தூவும் பணியிலும் விவசாயிகள் ஆர்வமுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி மேலச்செல்வனூரை சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளாக மழை இல்லாததால் விவசயாம் செய்யவில்லை.

இந்த ஆண்டு தான் பருவமழை நன்றாக பெய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு

இந்த ஆண்டு தான் விவசாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளோம்.இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும்.இதே போல் ஆண்டு தோறும் பருவ மழை நன்றாக பெய்தால் கண்மாய்,குளங்களிலும் தண்ணீர் இருப்பதோடு விவசாயமும் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story