பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிர்ப்பு: இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் 213 பேர் கைதாகி விடுதலை


பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிர்ப்பு: இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் 213 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 8:49 PM GMT)

பாபர் மசூதி விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜவாஹிருல்லா, தெஹலான் பாகவி உள்பட 213 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

கோவை,

பாபர் மசூதி நில விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நியாயமற்றது என்று கூறி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹலான் பாகவி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜவாஹிருல்லா பேசும்போது, 464 ஆண்டுகால பாபர் மசூதி விவகாரத்தில், தீர்ப்பு ஒருதலைபட்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்து உரிய நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி பேசும்போது, பாபர் மசூதி விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் தான் பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறது. இது இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கும். சென்னையில் வியாழக்கிழமை(இன்று) இந்த கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நெடுமாறன், திருமாவளவன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள் என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பேசும்போது, சபரிமலை வழக்கில் வேறு நீதிபதிகள் கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாபர் மசூதி விஷயத்தில் மட்டும் ஒருதலைபட்சமாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

213 பேர் கைது

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள், மே-17 இயக்கம், தமிழர் விடுதலைகழகம், திராவிடர் விடுதலை கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

போலீஸ் தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உள்பட 213 பேர் கைது செய்யப்பட்டு கோவை அவினாசி ரோட்டில் உள்ள மீனாட்சி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Next Story