விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன்? பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்


விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரன் கொலை ஏன்? பிடிபட்டவர்கள் தெரிவித்த பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 10:10 PM GMT)

விடுதலையான சில மணி நேரங்களில் புதுவை ரவுடி அமரனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பிடிபட் டவர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மடுவு பேட்டையை சேர்ந்தவர்கள் முரளி, சுந்தர். பிரபல ரவுடிகளான இவர்கள் நண்பர்களாக இருந்து வந்தனர். தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.

ஆனாலும் இவர்களுக்குள் இருந்து வந்த விரோதம் அதிகரித்து யார் பெரியவர் என்பதை காட்டிக் கொள்ள ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் இவர்களுக்குள் சமரசம் செய்து வைக்க மற்றொரு ரவுடியான தட்டாஞ்சாவடி செந்தில் முயற்சி எடுத்தார். இதற்காக கடந்த 2.2.2017 அன்று அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து முரளி, சுந்தர் இடையே சமரச பேச்சு நடத்தினார்.

ஆனால் இதில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாத நிலையில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்து எதிர்பாராதவிதமாக சுந்தரின் ஆதரவாளர்கள் மறைத்து எடுத்து வந்த ஆயுதத்தால் முரளியை கொலை செய்தனர். அவரது ஆதரவாளர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், லாஸ்பேட்டை பாண்டியன் மகன் அமரன் (வயது 26) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 18-ந்தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ரவுடி முரளி கொலை வழக்கில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அன்று மாலையே அமரன் சிறையில் இருந்து வெளியே வந்தார். எதிரிகளால் உயிருக்கு ஆபத்து என்பதால் அமரனை அவரது தந்தை பாண்டியன், மைத்துனர் உதயகுமார் ஆகியோர் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்துக்கு காரில் அழைத்துச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருங்குழி என்ற இடத்தில் காரை நிறுத்தி விட்டு மதுக்கடைக்கு சென்றனர். காரில் அமரன் மட்டும் இருந்துள்ளார். அப்போது 5 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்ற 7 பேர் கும்பல் அமரனை இழுத்துப் போட்டு வெட்டி விட்டு தப்பியது. சத்தம் கேட்டு தடுக்க முயன்ற பாண்டியனுக்கும் வெட்டு விழுந்தது. இதில் முகம் சிதைந்து அந்த இடத்திலேயே அமரன் செத்தார். கொலை வழக்கில் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் துரத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து வடலூர் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து ரவுடி அமரன் கொலையில் தொடர்புடைய மடுவுபேட் பார்த்திபன், குமரகுரு பள்ளம் சரவணன், புதுப்பேட் சதீஷ் ஆகியோர் உள்பட 4 பேரை பிடித்தனர். தொடர்ந்து மோகன்ராஜ், தேவராஜ் ஆகியோரும் போலீசில் சிக்கினர். இவர்கள் 6 பேரிடமும் விசாரித்ததில், ரவுடி முரளி கொலைக்கு பழிக்குப்பழியாகவே அமரனை தீர்த்துக்கட்டியதாக தெரிவித்தனர். அவரை மட்டும் குறி வைத்து கொலை செய்ததற்கு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரித்தனர்.

தட்டாஞ்சாவடி செந்தில் முன்னிலையில் சமரசம் பேசியபோது ஆயுதங்களை இருதரப்பிலும் எடுத்து வரக்கூடாது என தெரிவித்து இருந்தனர். அதன்படி நாங்கள் சென்றபோது அமரன் ஆயுதத்தை ஷூவுக்குள் மறைத்து எடுத்து வந்தார். அங்கு பேசிக் கொண்டிருந்தபோது பிரச்சினை ஏற்பட்டதால் அவர் தான் ஏற்கனவே மறைத்து எடுத்து வந்து இருந்த கத்தியால் முரளியை முதலில் வெட்டினார்.

அதன்பிறகு சுந்தரின் ஆதரவாளர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரமே அமரனை கொலை செய்ய காரணம் என்று போலீசில் அவர்கள் பரபரப்பு தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story