பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை மராட்டியம் வருகை


பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை மராட்டியம் வருகை
x
தினத்தந்தி 21 Nov 2019 3:41 AM IST (Updated: 21 Nov 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்ய நாளை மத்திய குழு மராட்டியம் வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு காத்திருந்த சோயாபீன், பருத்தி உள்பட ஏராளமான பயிர்கள் நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நிவாரணம் அறிவித்தார்.

இதன்படி நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரமும், தோட்டப்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

மத்திய குழு வருகை

பருவம் தவறி பெய்த மழையை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்டு உள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை (வெள்ளிக்கிழமை) மராட்டியம் வருகிறது.

அவர்கள் நாளை முதல் 3 நாட்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிர் சேதம் குறித்து மதிப்பீடு செய்கிறார்கள். விவசாயிகளை சந்தித்தும் பேசுகிறார்கள். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 94 லட்சத்து 53 ஆயிரத்து 139 ஹெக்டேர் நிலத்தில் பயிர் சேதம் அடைந்து இருப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story