கடலூர் மாவட்டத்தில் 2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு - கலெக்டர் தகவல்


கடலூர் மாவட்டத்தில் 2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 12:57 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

தமிழகத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் திருமணமான தங்களின் பெண் பிள்ளைகளின் வளைகாப்பு நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், சந்தனம், சேலை, வளையல், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் எவர் சில்வர் தட்டு என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிகளுக்கு 7-வது மற்றும் 9-வது மாத காலத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.

ஜெயலலிதா வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பொதுமக்கள் உடனுக்குடன் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் 2019-2020-ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் கீழ் 14 வட்டாரங்களிலுள்ள 71 தொகுதிகளுக்கு தலா 40 கர்ப்பிணிகள் வீதம் ஆண்டுக்கு 2,840 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் மூலமாக இலவசமாக நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.7லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கு ஆண்டுதோறும் தேவையான சீர்வரிசைகள் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story