பஸ்சிற்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி தொழிலாளி பலி - 5 பேர் படுகாயம்


பஸ்சிற்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி தொழிலாளி பலி - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Nov 2019 9:30 PM GMT (Updated: 21 Nov 2019 3:35 PM GMT)

பஸ்சிற்காக காத்திருந்வர்கள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 50). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை கூலி வேலைக்கு செல்வதற்காக கங்கைகொண்ட சோழபுரம் பஸ் நிறுத்தத்தில், பஸ்சிற்காக அங்குள்ள சிமெண்டு கட்டையில் அமர்ந்திருந்தார். அவருடன் கூலி வேலைக்கு செல்வதற்காக கங்கைகொண்ட சோழபுரம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் பூமிநாதன்(30), அய்யப்பன் என்கிற ராஜ்(31), ரவிக்குமார்(45), குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள பள்ளர் தெருவை சேர்ந்த தர்மலிங்கம்(65), இவரது தம்பி அன்பழகன்(49) ஆகியோர் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சிற்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் மட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பூமிநாதன், அய்யப்பன், ரவிக்குமார், தர்மலிங்கம், அன்பழகன் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்த கார் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் விசாரணை நடத்தினார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story