திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமை ஆசிரியை தர்ணா


திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமை ஆசிரியை தர்ணா
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 5:15 PM GMT)

பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியை தர்ணாவில் ஈடுபட்டார். விசாரணைக்காக போலீசார் அவரை அழைத்து சென்ற போது கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா. இவர், வேறு பள்ளிக்கு இடமாறுதலில் செல்ல விரும்பினார். இதையடுத்து அவர் பணியிட மாறுதல் கேட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால் அய்யம்பட்டி பள்ளியில் அவர் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெறவில்லை என்று கூறி அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இது தலைமை ஆசிரியை இந்திராவுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே கடந்த 19-ந்தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல்லில் நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை இந்திரா, அங்கு வந்து தனக்கு பணியிட மாறுதல் வழங்கும்படி அதிகாரிகள் முன்பு தரையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு சரியாக வராதது, கலந்தாய்வின் போது அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை இந்திரா, நேற்று காலை திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அங்கு இல்லை. திண்டுக்கல் ஜான்பால் பள்ளியில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு அவர் சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து பணியிடை நீக்கத்தை ரத்து செய்து விட்டு, பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை ஆசிரியை இந்திரா முதன்மை கல்வி அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும் வரை அலுவலகத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்று தலைமை ஆசிரியை இந்திரா தெரிவித்தார். எனினும், போலீசார் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக அவரை, போலீசார் அழைத்து சென்றனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா கதறி அழுதபடி சென்றார். இந்த சம்பவத்தால் முதன்மை கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story