நெட்டப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? விசாரணை தீவிரம்


நெட்டப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை பணிச்சுமை காரணமா? விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 5:20 PM GMT)

நெட்டப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில், சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வில்லியனூர்,

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தத்தைச் சேர்ந்தவர் விபல்குமார் (வயது 40). நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் வீட்டுக்கு செல்லவில்லை. போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் உள்ள வீட்டில் ஓய்வு எடுக்கச் செல்வதாக சக போலீசாரிடம் கூறிவிட்டு சென்றார்.

நேற்று காலை 9 மணி அளவில் விபல்குமார் பணிக்கு வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்தின் பின்புறமுள்ள குடியிருப்புக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அப்போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த ஏட்டு வாழுமுனி அவரை தேடி குடியிருப்புக்கு சென்றார்.

அங்கு அவரது அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது சப்-இன்ஸ் பெக்டர் விபல்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன், ரவிக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அதுபற்றி விபல் குமாரின் மனைவி விஷ்ணு பிரியா மற்றும் அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விபல்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

விபல்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விட்டு தொடர்ந்து விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தூக்கில் தொங்கிய அறையில் அவர் எழுதிய கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சப்- இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையா? அல்லது பணிச்சுமை காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story