திருச்சி ஏ.டி.எம். எந்திரத்தில், ஆட்டோ டிரைவர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரம் - போலீசில் ஒப்படைத்த தையல் தொழிலாளிக்கு பாராட்டு
திருச்சி ஏ.டி.எம். எந்திரத்தில் ஆட்டோ டிரைவர் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரத்தை தையல் தொழிலாளி எடுத்து போலீசில் ஒப்படைத்த நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மலைக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது32). இவர், திருச்சி பாலக்கரையில் தையல் கடை நடத்தி வருகிறார். நவநீதகிருஷ்ணன், திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் வங்கி கிளை ஏ.டி.எம். மையத்திற்கு அவசர தேவைக்காக தனது கணக்கில் இருந்து ரூ.4 ஆயிரம் பணம் எடுக்க சென்றார். அவருக்கு முன்னால் கணேசன் என்பவர் சென்றார். அங்கு 2 எந்திரங்கள் உள்ளன.
ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க நவநீதகிருஷ்ணன் கார்டை சொருக முயன்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் இடத்தில் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது. அருகில் நிற்பவரிடம் சார்... இது உங்கள் பணமா? என்று அவர் கேட்டார். இல்லை, நான் வருவதற்கு முன்பு இங்கிருந்து ஒருவர் வேகமாக வெளியே சென்றார். எனவே,அவரது பணமாக இருக்கலாம் என கணேசன் தெரிவித்தார்.
உடனே அந்த பணத்தையும் எடுத்து கொண்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் தனக்கு தேவையான ரூ.4 ஆயிரத்தையும் எடுத்தார். பின்னர், திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நவநீதகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரிசாமி, போலீஸ் ஏட்டு புகழேந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். போலீசாரிடம் நவநீதகிருஷ்ணன் அந்த பணத்தை ஒப்படைத்தார். அந்த பணம் யாருடையது என்று அங்கு போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அந்தவேளையில் வேகமாக ஓடிவந்த ஒருவர், சார்..பணம் என்னுடையது. தனது பெயர் சார்லஸ் ஹென்றி என்றும், திருச்சி அருகே உள்ள மணிகண்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு ஆட்டோ டிரைவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் சார்லஸ் ஹென்றி கூறுகையில், ‘‘இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றேன். ஆனால், பணம் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. எனவே, பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் இல்லை என்று நினைத்துக்கொண்டு சென்று விட்டேன். உடனடியாக அருகில் உள்ள வேறு எந்திரத்தில் பணம் எடுக்க சென்றபோது, ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டதாக செல்போனில் குறுந்தகவல் வந்தது. உடனே திரும்பி வந்து விட்டேன்’ என்றார்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை எடுத்த நவநீதகிருஷ்ணனையும், விட்டுச்சென்றதாக கூறப்படும் சார்லஸ் ஹென்றியையும் ஸ்டேட் வங்கி மேலாளர் மிருணாவிடம் போலீசார் அழைத்து சென்று ஒப்படைத்தனர். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விட்டு பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள் எனக்கூறி போலீசார் சென்று விட்டனர்.
பின்னர் வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம்.மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். அதே வேளையில் நேர்மையாக ரூ.10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தையல் தொழிலாளியை போலீசாரும் வங்கி அதிகாரிகளும் பாராட்டினர்.
Related Tags :
Next Story