வெங்கக்கல்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


வெங்கக்கல்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 6:04 PM GMT)

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி குளத்தில் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர், 

கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் அணுகு சாலையை ஒட்டியபடி குளம் ஒன்று உள்ளது. முன்பு அமராவதி ஆற்றின் உபரிநீரானது வாய்க்கால்கள், ஓடை வழியாக கொண்டுவரப்பட்டு இந்த குளத்தில் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர் இந்த குளத்திலிருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து நீர்வழிப்பாதை வழியாக சென்று கரூரிலுள்ள ஏனையகுளங்களுக்கு தண்ணீர் செல்லும் படி இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக வெங்கக்கல்பட்டி குளம் பராமரிப்பின்றி இருந்ததால், அதில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் வேண்டாத செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்த குளத்தினையும், அதனையொட்டிய நீர்வழிப்பாதைகளையும் தூர்வாரி பழையபடி தங்குதடையின்றி தண்ணீர் இந்த குளத்திற்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று வெங்கக்கல்பட்டி குளத்தினை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த குளத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன்தூர்வாரும் பணிகளை அவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள்,வாய்க்கால்கள் என அனைத்து நீர்வழித்தடங்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 484 குளங்கள் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் மூலம் 33 பணிகள் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விவசாயத்திற்கு தங்குதடையின்றி தண்ணீர் கிடைப்பதால் பணிகள் தொய்வின்றி மும்முரமாக நடப்பதை காண முடிகிறது.

அந்த வகையில் இன்று (நேற்று) கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கக்கல்பட்டி பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் பரப்பளவிலான குளம், கரூர் மாவட்ட டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் மற்றும் எர்த் மூவர்ஸ் அசோசியேசன் பங்களிப்புடன், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணி தொடங்கி நடக்கிறது. தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நீர்நிலைகளை பாதுகாக்க முன்வருகிறபோது எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலையை நாம் உருவாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட கலெக்டர் அன்பழகன், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி உ‌ஷா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எம்.எஸ்.மணி, மூக்கணாங்குறிச்சி கூட்டுறவு சங்கத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story