கார் மோதி கல்லூரி மாணவி பலி: தலைமறைவான டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு


கார் மோதி கல்லூரி மாணவி பலி: தலைமறைவான டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 6:34 PM GMT)

பெரம்பலூரில், கார் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் துறைமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் கீர்த்திகா (வயது 21). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே உள்ள சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், கீர்த்திகா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த கீர்த்திகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவின் கார் என்றும், அவரது பெற்றோரை டிரைவர் அழைத்துச் சென்றபோது விபத்து நேர்ந்ததாக தகவல் தெரியவந்ததாகவும் போலீசார் கூறினர்.

பின்னர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த கார் அரியலூர் கலெக்டரின் கார் இல்லை என்பது தெரியவந்தது. அந்த கார் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படக்கூடிய தனியாருக்கு சொந்தமான கார் எனவும், சம்பவத்தன்று கலெக்டரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு அந்த கார் வந்தபோது மாணவி கீர்த்திகா மீது மோதியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கீர்த்திகாவின் தந்தை துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவரான அரியலூரை சேர்ந்த செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story