வேறு சமூக வாலிபரை காதலித்ததால் மகளை எரித்துக்கொன்று தீக்குளித்த தாய்க்கு தீவிர சிகிச்சை


வேறு சமூக வாலிபரை காதலித்ததால் மகளை எரித்துக்கொன்று தீக்குளித்த தாய்க்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 6:55 PM GMT)

வேறு சமூக வாலிபரை காதலித்ததால் ஆத்திரம் அடைந்து மகளை எரித்துக்கொன்று விட்டு தீக்குளித்த தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ஆணவக்கொலை என காதலனின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திட்டச்சேரி,

நாகை அருகே உள்ள வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுடைய மகள் ஜனனி(வயது 17). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(22) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். ராஜ்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு ஜனனியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிளஸ்-2 படித்து வந்த ஜனனியின் படிப்பை அவரது பெற்றோர் பாதியில் நிறுத்தி விட்டனர்.

இதையடுத்து ஜனனியை ராஜ்குமார், வக்கீல் ஒருவரின் உதவியுடன் மயிலாடுதுறையில் உள்ள விடுதியில் சேர்த்தார். இதை அறிந்த ஜனனியின் பெற்றோர் மயிலாடுதுறை விடுதியில் இருந்து ஜனனியை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஜனனிக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர்.

போலீசில் புகார்

இதை அறிந்த ராஜ்குமார், ஜனனியை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜனனியின் தாய் உமாமகேஸ்வரி, திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் தனது மகளை ராஜ்குமார் கடத்தி விட்டதாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் ஜனனியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ராஜ்குமார், ஜனனிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து காத்திருந்தார். இதனிடையே ஜனனி, தனது காதலன் ராஜ்குமாரை அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இது அவருடைய தாய் உமாமகேஸ்வரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர், ஜனனியிடம் காதலை கைவிடும்படி அறிவுறுத்தினார்.

தீ வைத்து எரிப்பு

சம்பவத்தன்று காதல் விவகாரம் தொடர்பாக ஜனனிக்கும், உமாமகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜனனி தனக்கு 18 வயது பூர்த்தியாக 4 நாட்களே உள்ளது என்றும், 18 வயது பூர்த்தியானதும் ராஜ்குமாரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி உள்ளார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த உமாமகேஸ்வரி ஜனனி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த தாயும், மகளும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜனனி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

மரண வாக்குமூலம்

முன்னதாக ஜனனி, நாகை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் தான் காதலித்த ராஜ்குமார் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் கொடுக்க மனம் இல்லாமல் தாய் தன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாக ஜனனி கூறி உள்ளார்.

இந்த நிலையில் ஜனனி ஆணவக்கொலை செய்யப்பட்டு இருப்பதாக ராஜ்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர சிகிச்சை

தீக்குளித்து ஆபத்தான நிலையில் உள்ள உமாமகேஸ்வரிக்கு நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது திட்டச்சேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story