டிக்-டாக் வீடியோ எடுத்தபோது, குட்டையில் மூழ்கி வாலிபர் பலி - கோவை அருகே பரிதாபம்


டிக்-டாக் வீடியோ எடுத்தபோது, குட்டையில் மூழ்கி வாலிபர் பலி - கோவை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:06 PM GMT)

கோவை அருகே டிக்-டாக் வீடியோ எடுத்தபோது குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருமத்தம்பட்டி, 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 23). இவருடைய நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன். இவர்கள் 4 பேரும் விசைத்தறி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் நேற்று காலை வடுகபாளையம் பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றனர். அப்போது குட்டையில் குளித்து கொண்டிருந்த போது விக்னேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் விக்னேஸ்வரன் குட்டையில் மூழ்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு விக்னேஸ்வரன் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குட்டையில் மூழ்கி பலியான விக்னேஸ்வரன் செல்போனில் கடைசியாக குட்டையில் வைத்து எடுத்த டிக்-டாக் வீடியோ இருந்தது.

அந்த வீடியோவில் விக்னேஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து, குட்டையில் நீந்தியபடி ஒரு காளை மாட்டின் மீது ஏறி டிக்-டாக் செய்துள்ளார். இந்த வீடியோ எடுத்தபோது குட்டையில் மூழ்கி வாலிபர் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த டிக்-டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story