தனி வார்டை, பொது வார்டாக மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தனி வார்டை, பொது வார்டாக மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே தனி வார்டை, பொதுவார்டாக மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டாக இருந்த பகுதி வார்டு சீரமைப்புக்கு பிறகு 12-வது வார்டாக மாற்றப்பட்டு, தனி வார்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டை பொது வார்டாக மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பொது வார்டாக மாற்றக்கோரி மனு அளிப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மேலதிருப்பூந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் நடந்த போராட்டத்துக்கு பின்னர் பொதுமக்கள் பேரூராட்சி செயல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அடிப்படை வசதிகள்

மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் 3-வது வார்டு பொது வார்டாக இருந்தது. இந்த வார்டு சீரமைப்பு செய்த பிறகு 12-வது வார்டு என மாற்றப்பட்டு தனி வார்டாக (எஸ்.சி. பெண்) அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி.) மக்கள் 400 பேர் வசித்து வருகிறோம். தனி வார்டாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் நாங்கள் உறுப்பினராக முடியாது.

இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வசதியாக மீண்டும் பழையபடி பொது வார்டாக மாற்றித்தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story