தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியல் பணம் திருட்டு


தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது. சாமியின் திரிசூலத்தை எடுத்து பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 11-9-2008-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோவில் வளாகத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் 2 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கு பைரவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உண்டியலை உடைத்து திருட்டு

இரவு பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை கோவில் நிர்வாகிகள் காலை கோவிலுக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் கோவிலின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே வந்துள்ளனர்.

அங்கு பைரவர் சன்னதியில் இருந்த திரிசூலத்தை எடுத்து, உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த 2 மின் விளக்குகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? என தெரிய வில்லை.

வழக்குப்பதிவு

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story